நடிகர் விஜய் கடந்த பல வருடங்களாகவே தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். அதன்பின் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அதன் தலைவராகி விட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது. தற்போது தமிழகமெங்கும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதன்பின் அரியலூர், பெரம்பலூர் போன்ற சில இடங்களுக்கும் சென்றார். நேற்று திருவாரூர் சென்றிருந்தார். செல்லும் இடங்களில் பேசும் விஜய் தொடர்ந்து ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை நோக்கி அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார். ‘நான் செல்லும் இடமெல்லாம் பவர் கட் பண்ணுகிறீர்கள். இதே ஒரு ஆர்எஸ்எஸ் தலைவரோ இல்லை பிரதமர் மோடி-ஜியோ வந்தால் இப்படி செய்வீர்களா?.. என்னை மிரட்டி பார்க்கிறீர்களா? அதற்கு நான் ஆளில்ல சார்.. மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் உங்களுக்கு இவ்வளவென்றால் உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்?’ என்றெல்லாம் அதிரடியாக பேசினார் விஜயின் பேச்சு திமுகவினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி சமூகவலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நடிகர் விஜய் எப்போதும் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. அதுவும் அரசியலுக்கு வந்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுவதே இல்லை. தற்போது அவர் வெளியே வர துவங்கியிருப்பதால் அவரிடம் எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என பல செய்தியாளர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் பக்கம் திரும்புவது கூட இல்லை.
திருச்சியில் வேனில் சென்று கொண்டிருந்த பொது சில பத்திரிக்கையாளர்கள் வேனுக்குள் மைக்கை நீட்டியபோது கதவை சாத்திக் கொண்டார் விஜய். இந்நிலையில் நேற்று அவர் காரிலிருந்து இறங்கியபோது அங்கே அவருக்காக காத்திருந்த சில செய்தியாளர்கள் ‘சார் ஒரு பேட்டி.. சார் ஒரு பேட்டி..’ என கத்தினார்கள். ஆனால் விஜய் அவர்களை பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்களில் ஒருவர் ‘மெண்டல்’ என அவரை திட்டினார். இந்த வீடியோவை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘உலகத்திலேயே ஒரு கட்சித் தலைவரை மெண்டல் என ஒரு செய்தியாளர் திட்டியது இதுதான் முதல் முறை’ என நக்கலடிடுத்து வருகிறார்கள்.
விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்டு வருகிறார். அதற்கு பதில் சொல்ல முடியாத திமுகவினர் இது போன்ற வீடியோக்களை பகிர்ந்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள்.