காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) மற்றும் அவரது மனைவி பரிதாபேகம் (31) ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இம்ரானுடன் இணைந்து வாழ்ந்து வந்த பரிதாபேகம், அவரது கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்து அறிந்து கடும் கோபமடைந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இம்ரானை, பரிதா பேகம் இரண்டு கத்திகளை பயன்படுத்தி மாறி மாறி குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது வயிறு, தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயங்களுடன் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த இம்ரானை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இம்ரான் சையத் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஒரகடம் போலீசார் பரிதா பேகத்தை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் கணவர் இக்பாலுடன் பிரிந்து, இரண்டாம் வாழ்க்கை வாழ்ந்த பரிதா பேகம் இம்மாதிரியான கடுமையான முடிவுக்கு வந்ததற்கான காரணங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.