ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர் 04 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 04 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-02 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
அந்த வகையில் நேற்று இலங்கை - வங்கதேச போட்டியில், இறுதி ஓவரில் வங்கதேச அணி இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 02-வது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 05 விக்கெட்டைகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 58 ரன்கள் எடுத்தார். இந்தியா அணி தரப்பில் ஷிவம் துபே 02 விக்கெட்களும், ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ் தல ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் சுப்மன் கில் 47 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.
தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கிய நிலையில், அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 74 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கி 13 ரங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹர்டிக் பாண்டியா களமிறங்கினார்.
இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 04 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் போது காலத்தில் திலக் வர்மா 30 ரன்களிலும், ஹர்டிக் பாண்டியா 07 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவ்ப் 02 விக்கெட்கள், அப்ரர் அஹமட் , பாஹிம் அஸ்ரப் தல ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.