ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய போர் கப்பல்கள்: இந்திய கடற்படை திட்டம்..!
Seithipunal Tamil September 22, 2025 11:48 AM

இந்திய கடற்படை தங்களது போர்த்திறனை வலுப்படுத்துவதற்காக 4 புதிய போர்க்கப்பல்களை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் டெண்டர் விடுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

குறித்த போர் கப்பல்களில் இருந்து டிரோன்களை இயக்கவும், கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் வகையிலும் புதிய கப்பல்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த பரிந்துரையை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் இருந்து இது குறித்து கூறியதாவது: ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய கடற்படையின் திட்டம் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளதாகவும், நாட்டில் மிகப்பெரிய போர்க்கப்பல் கட்டுமானத்தில் ஒன்றாக இது இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த ஒப்பந்தத்தை பெற எல் அண்ட் டி, மஜகோன், டக்யார்ட்ஸ், கொச்சின் ஷிப்யார்டு மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கப்பலின் வடிவமைப்பை நிர்ணயிப்பதில் சர்வதேச நிறுவனங்களான நவன்டியா, நேவல் குரூப், பின்கேன்டியரி ஆகிய நிறுவனங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரியவருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.