முன்னாள் உலக அழகியும், நடிகையுமான மனுஷி சில்லர் தானும் உடல் எடை மற்றும் தோற்றம் குறித்து உருவக் கேலி விமர்சனங்கள் சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, அவர், ஒரு பிரபலமாக ஆன பிறகும், தனது உடல் தோற்றம் குறித்து எதிர்கொண்ட உருவக் கேலி விமர்சனங்கள் பற்றி வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துவும் கூட உடல் ரீதியான எதிர்மறை விமர்சனங்களில் இருந்து தப்ப முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு மருத்துவ மாணவியாக இருந்த போது இதுபோன்ற விமர்சனங்கள் தன்னை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு உடல் எடை, உருவ அமைப்பின் விமர்சனங்களின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இவாறான உருவக் கேலி விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டுமானால், வெளியில் இருந்து வரும் தேவையற்ற விமர்சனங்களை ஒருபோதும் நமது காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன், நம் மீது அக்கறை கொண்ட வழிகாட்டிகளின் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்றவர்களின் விமர்சனங்கள் பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதால், அதனைப் பொருட்படுத்தாமல், நம்மை நாமே நேசிப்பதும், நம்மைப் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.