தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணிகள் அமைப்பு, கட்சிகளின் பிரச்சாரம் – அனைத்தும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகரும் தவெகத் தலைவருமான விஜய் தனது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சார மேடைகளில் தோன்றுகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அருகிலுள்ள ஊர்களிலிருந்தே மக்கள் வந்து சேர்வதால், விஜயின் பிரச்சாரக் கூட்டங்களில் அபாரமான திரளைக் காண முடிகிறது.
ஆனால், இந்த கூட்டத்தை அரசியல் செல்வாக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு சாடியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் –"ரசிகர் கூட்டத்தை பார்த்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிரஞ்சீவிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? பாக்கியராஜ், டி. ராஜேந்தருக்கும் கூட்டம் இருந்தது. ஆனால், அதை வைத்து அரசியல் மதிப்பு அளிக்க முடியாது. நடிகர் என்றாலே கூட்டம் கூடும். விஜய் முன்னணி நடிகர் என்பதால் அவருக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை குறை சொல்லவில்லை. ஆனால், அந்த கூட்டத்தை வைத்து அரசியல் வெற்றியை அளவிடக் கூடாது" என தெரிவித்தார்.
மேலும், “சிவாஜி கணேசனை நம்பி வந்தவர்கள் எங்கே? பின்னர் அவர்கள் அடையாளமே இல்லாமல் போய்விட்டார்கள். காங்கிரஸிலிருந்து பலர் விலகி வேறு கட்சிகளில் இணைந்தும் முக்கியத்துவம் பெறவில்லை. இதே நிலை பல நடிகர்-அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
செல்லூர் ராஜுவின் இந்தக் கருத்துக்கு இணையான கருத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசனும் நேற்று தெரிவித்தார். நடிகர் என்பதாலேயே கூட்டம் கூடும், ஆனால் அது வாக்குகளாக மாறும் என உறுதி கூற முடியாது என்பதே கமலின் வாதமும் ஆகும்.
இதனால், விஜய்க்கு கிடைக்கும் அபாரமான வரவேற்பு, அவரது அரசியல் பயணத்திற்கு எவ்வாறு மாறும் என்பது தற்போது பெரிய கேள்வியாகவே உள்ளது. ஒருபுறம் திமுக, அதிமுக கூட்டணிகள்; மறுபுறம் விஜய் தலைமையிலான புதிய கூட்டணி; அதோடு சீமானின் நாம் தமிழர் கட்சி – இவை அனைத்தும் தேர்தல் களத்தில் இறங்கும் நிலையில், அடுத்தாண்டு தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி உறுதி என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.