சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த, ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
சபரிமலை சன்னிதானம், பம்பை மற்றும் சபரிமலைக்கு செல்லும் வழியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என்றும், இதற்காக, மொத்தம் ரூ.1,033.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த பணிகள் 2039-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 2025 முதல் 2030-ம் ஆண்டுக்குள் ரூ.300 கோடி செலவிடப்படும் என்றும் அவர் கூறினார்.
சபரிமலை மாநாட்டிற்கு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன், "சிலர் பக்தர்களை போல நடித்து, இந்த மாநாட்டை தடுக்க உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தியது" என்று குறிப்பிட்டார்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், 15 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran