'அனைவரும் பார்த்து நடுங்குகின்ற ஆட்சி திமுக ஆட்சி: விமர்சிப்பவர்களின் கனவு 2026-ஆம் ஆண்டு பொய்த்து போகும்': சேகர்பாபு பேட்டி..!
Seithipunal Tamil September 23, 2025 12:48 AM

திமுகவை விமர்சனம் செய்பவர்களின் கனவு, 2026-ஆம் ஆண்டு பொய்த்து போகும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை பிராட்வே ஜீலஸ் தெருவில் அன்னம் தரும் அமுதகரங்கள் என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். 214-வது நாளாக அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி மூலம் 428 இடங்களில் உணவு வழங்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

அப்போது, நிருபர்கள் கேரளாவில் நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு என்ன கோரிக்கை வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்  தமிழக எல்லை பகுதியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும். அங்கு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும், கோயிலுக்கான வழிபாதை செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மார்கழி மாதத்தில் தமிழகத்தில் இருந்துதான் அதிக பக்தர்கள் வருவதால், அவர்கள் தங்குவதற்கான கட்டிட பணி நடைபெறும் என கூறியுள்ளதாக கூறியுள்ளார்.

இதுபோல் பழனியில் 5 ஏக்கர் பரப்பளவில் கோயில் பணி மேற்கொள்ள அவர்கள் இடம் கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேரள ஐயப்பன் கோயில்களில் மண்டல மற்றும் மகர பூஜை காலங்களில் வரும் தமிழக பக்தர்களுக்காக மருத்துவ வசதிக்காக கன்னியாகுமரி தேவஸ்தானத்தை சேர்ந்த 02 அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு அறை, உணவு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து திமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி உரிய பதிலளித்துள்ளார். அதுவே போதுமானது. அதனால் அதுபற்றி பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் குட முழுக்கு பணி எவ்வாறு நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு, குடமுழுக்கு பணி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறதாகவும், ஜனவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தி முடிக்கவேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அது நிச்சயம் நடக்கும், திமுக ஆட்சியில்தான் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது என்றும், ஜனவரி மாதத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கிய தவெக, அதிமுக, பாஜக, பாமக என அனைத்து கட்சிகளும் திமுக மீது கடும் விமர்சனம் வைக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், காய்த்த மரத்தில்தான் கல்லடிப்படும் என சொல்வார்கள். இதனால் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அனைவரும் பார்த்து நடுங்குகின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இவர்களின் கனவு 2026-ஆம் ஆண்டு பொய்த்து போகும் என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.