ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிகள் காட்டெருமை, யானை, கரடி, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் சொந்த இல்லமாக விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக திம்பம், பர்கூர்,தாளவாடி, ஆசனூர் போன்ற பகுதிகளில் யானைகள் பெருமளவில் வசித்து வருகின்றன.
அண்மைக்காலமாக, இவ்வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி–மைசூர் தேசிய நெடுஞ்சாலையை தங்கள் முகாமாக மாற்றியுள்ளன. அங்கு வழியாகச் செல்லும் கரும்பு பார வாகனங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இனிப்பு சுவைக்காக கரும்புத் துண்டுகளைப் பறித்துச் சாப்பிடும் காட்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
அங்கு சில சமயங்களில் வாகனங்களையே துரத்தும் சூழ்நிலைகளும் உருவாகி, ஓட்டுநர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனி யானை முகாமிட்டு வாகனங்களை சவால்விடும் காட்சி வாகன ஓட்டிகளை பதற வைத்துள்ளது.
இதில் நேற்று மாலை அந்த யானை, கரும்பு ஏற்றிய லாரியை மடக்கி நிறுத்தி, வாகனத்தின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை திறம்பட கீழிறக்கி சுவைத்தது. இந்த ‘கரும்பு விருந்து’ நிகழ்ச்சியால் சாலையில் போக்குவரத்து சில நேரம் தடைபட்டது.இதையடுத்து யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டாலும், அடிக்கடி சாலையில் தோன்றி வாகனங்களைத் தடுக்கும் இந்த தனி யானையின் அட்டகாசம் தொடர்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள், அந்த யானையை அடர்ந்த காடுகளுக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், “ஆசனூர் வழியாக செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எந்தக் காரணத்திற்கும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்” என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.