ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.
போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் பறக்கவிட்டார். அவருக்கு துணைநின்ற சுப்மன் கில் 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். இருவரும் தொடக்கம் முதலே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து ஆட முடியாமல் தள்ளினர்.
ஆனால், ரன் மழை பொழிந்தபோது, களத்தில் பரபரப்பு வெடித்தது. பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ராஃப், அபிஷேக் சர்மாவிடம் ஏதோ சொன்னார். அதற்கு அபிஷேக் நேரடியாக பதிலடி கொடுத்ததால் வாக்குவாதம் வெடித்தது. கள நடுவர் ராஃபை தடுத்து பின்வாங்கச் செய்ததால் அதிரடி தருணம் தற்காலிகமாக அடங்கியது.
இதோடு மட்டுமின்றி, சுப்மன் கில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்தபோது, ஷஹீன் அப்ரிடியுடனும் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. சுப்மன் பந்து சென்ற திசையை கையால் சுட்டிக்காட்டியதும் அப்ரிடி கடுமையாக எதிர்வினை தெரிவித்தார்.
ஐந்தாவது ஓவரிலேயே ஹாரிஸ் ராஃப், கில் அடித்த பவுண்டரிக்கு சீற்றம் காட்டி இரு இந்திய வீரர்களை நோக்கி ஆக்ரோஷமாக ஓடினார். அதற்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இருவரும் ராஃபை எதிர்கொண்டனர். இதனால் களத்தில் த்ரில்லான வாக்குவாதம் நடந்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் வாய்சவாடலை விடுத்து தங்கள் திறமையால் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்தியா வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பிடித்துள்ளது. பாகிஸ்தான், தோல்வியால் சிக்கலில் சிக்கியுள்ளது.