தமிழ்நாடு அரசியலில், நடிகர் விஜய்யின் வருகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது கட்சியின் பிரசார கூட்டங்களில் ஆளும் தி.மு.க. அரசின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், அக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளன.
திமுக அரசின் மீதான விமர்சனங்களை விஜய் முன்வைக்கும்போது, தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் அமைதி காக்கின்றனர். ஆனால், அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள், விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகவும், ஆக்ரோஷமாகவும் பதிலளித்து வருகின்றன. குறிப்பாக, விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், விஜய்யின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ‘பச்சை பொய்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க. அமைதியாக இருக்கும்போது விசிக பதறுவது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் அரசியல் நகர்வுகள் விசிகவின் வாக்கு வங்கியை சிதறடிக்கும் என்ற அச்சம் அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகள் விஜய் மீது கடும் கோபம் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், விஜய்யின் வருகை இந்த கட்சிகளின் வாக்கு வங்கியை பெரிதும் பாதிக்கும் என்ற பயம்தான். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய தலைமை வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள், விஜய் பக்கம் திரும்பி வருகின்றனர். சிறுபான்மையினர், இளைஞர்கள், பெண்கள், பா.ஜ.க. எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என பலதரப்பட்ட மக்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரு கட்சிகளுக்கும் எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த அதிருப்தியை விஜய் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார். அவரது கூட்டங்களுக்கு மக்கள் பணத்திற்காக அல்லாமல், தாமாகவே முன்வந்து திரளாக கூடுகின்றனர். இது, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரப்போகிறது என்பதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆதரவு தொடர்ந்து இதே வேகத்தில் அதிகரித்தால், எதிர்காலத்தில் விஜய் தனித்து ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva