ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற பெண்ணை கணவர் துரத்திச் சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் நந்தினி தம்பதிக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அன்குஷ் பதக்கின் பிறந்தநாள் பார்ட்டிக்கு நந்தினி சென்றுள்ளார். அப்போது அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை நந்தினி பேஸ்புக்கில் பதிவிட்டதைப் பார்த்து அரவிந்துக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நந்தினி, அன்குஷ் மற்றும் அவரது நண்பர் கல்லு ஆகிய 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததனை பார்த்த கணவர் அரவிந்த் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அரவிந்த் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நந்தினியை நோக்கி சுட்டார். இது குறித்து தகவலறிந்து உடனடியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனிடையே துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நந்தினி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் பட்டப்பகலில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சூழலில்தான் நந்தினி தனது ஆண் நண்பர் அன்குஷுடன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அரவிந்த் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அரவிந்த் போலியான ஏ.ஐ. வீடியோக்களை உருவாக்கி தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். புகார் அளித்துவிட்டு எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பியபோதுதான் நந்தினியை அரவிந்த் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.