இனி ஒரே டிக்கெட் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம்.. அறிமுகமாகும் சென்னை ஒன் செயலி..
TV9 Tamil News September 23, 2025 09:48 AM

சென்னை, செப்டம்பர் 22, 2025: சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்து சேவைகளுக்கும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியுடன் கூடிய ‘சென்னை ஒன்’ செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 22, 2025) தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் பொது போக்குவரத்து தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் இந்த போக்குவரத்து சேவைகளையே நம்பி வேலை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது சிரமமாக இருந்து வந்தது.

சென்னை ஒன் செயலி:

இதனைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், கும்டா (CUMTA) எனப்படும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு ஒரே மொபைல் ஆப் மூலம் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து ‘சென்னை ஒன்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கேப், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்றும், அவர்களின் பணியை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: அண்ணிக்களுடன் அத்துமீறிய தொடர்பு.. இளைஞர் கழுத்தறுத்து கொலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது. இதில், சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன், சென்னை ஒன் செயலியையும் செப்டம்பர் 22, 2025 அன்று (இன்று) தொடங்கி வைக்கிறார்.

சென்னை ஒன் செயலி பயன்படுத்துவது எப்படி?

இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல் பயனர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்த பின், தனிநபரின் மொபைல் எண்ணை பதிவு செய்து ஓடிபி (OTP) மூலம் உள்நுழையலாம். பின்னர் பெயர், மின்னஞ்சல், முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்த பின் பயணக் கணக்கு உருவாக்கப்படும்.

மேலும் படிக்க: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. பாலியல் தொல்லையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

செயலியில், பேருந்து, மெட்ரோ, ஆட்டோ, கேப், புறநகர் ரயில் என விரும்பிய சேவையைத் தேர்வு செய்து, செல்ல வேண்டிய இடத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு யுபிஐ (UPI) மூலம் கட்டணம் செலுத்தினால், டிஜிட்டல் டிக்கெட் கிடைக்கும். அந்த டிக்கெட்டை சம்பந்தப்பட்ட போக்குவரத்து சேவை அதிகாரிகளிடம் காட்டி பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த புதிய செயலி, அலுவலகம் செல்லும் அவசரத்தில் இருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் நின்று டிக்கெட் வாங்க காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக, சென்னையில் பொதுமக்களுக்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.