சமூக வலைதளங்களில் ஒரு யானையும், நாயும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், யானையின் புத்திசாலித்தனத்தையும் அமைதியான பண்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
‘யானை போகும் பாதையில் நாய் பாய்ந்தாலும், யானை தன் வழியில் செல்லும்’ என்பது பழமொழி. ஆனால், இந்த வீடியோவில் நாயைக் கண்டு யானை தன் பாதையை மாற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. செப்டம்பர் 20 அன்று @AMAZlNGNATURE என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த 12 வினாடிகள் கொண்ட வீடியோ, இதுவரை 1.85 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 4,000-க்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில், கம்பீரமாக நடந்து செல்லும் ஒரு பெரிய யானை, திடீரென தன் பாதையில் ஒரு நாயைப் பார்க்கிறது. பொதுவாக, யானை இதுபோன்ற சூழலில் நாயைப் பொருட்படுத்தாமல் தன் பயணத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படும். ஆனால், இங்கு நடந்தது அதற்கு நேர் எதிர்! யானை, நாயுடன் மோதுவதைத் தவிர்த்து, ‘சாரி, உன்னைப் பார்க்கல’ என்பது போல, அமைதியாக வேறு பாதையில் திரும்பி செல்கிறது.
இந்த யானையின் அமைதியான மற்றும் புரிந்துணர்ந்து செயல்படும் தன்மை இணையவாசிகளின் மனதைக் கவர்ந்துவிட்டது. ஒரு பயனர், “இதுதான் உண்மையான ஜென்டில்மேன்!” என்று புகழ்ந்தார். மற்றொருவர், “நாயின் பகுதியை மதித்து யானை வழிவிட்டது!” எனக் கிண்டலடித்தார். “நாயின் தைரியமும், யானையின் புத்திசாலித்தனமும் அபாரம்!” எனப் பலரும் கருத்து தெரிவித்து, இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.