பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியை ஹமாஸ் ஆயுதக்குழு நிர்வகிக்கிறது; மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு கையாளுகிறது.
2023ல் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா மீது இரண்டாண்டுகளாக போர் நடத்தி வருகிறது. இதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை உலகின் 140க்கும் மேற்பட்ட நாடுகள் தனிநாடாக அங்கீகரித்துள்ளன. ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அதனை ஏற்க மறுத்துள்ளன. சமீபத்தில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகியவை பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன. இதற்காக பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த முடிவை கடுமையாக எதிர்த்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பாலஸ்தீன அரசு உருவாகாது. எங்கள் நாட்டின் மையத்தில் பயங்கரவாத அரசை திணிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் அங்கீகாரம் வழங்கும் நாடுகள் பயங்கரவாதத்திற்கு பரிசளிப்பதாகும். ஆனால் அது நடக்காது. ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது” என தெரிவித்தார்.
மேலும், பல வருடங்களாக உள்ளக, வெளிநாட்டு அழுத்தங்களை மீறி பாலஸ்தீன அரசு உருவாகாமல் தடுத்துள்ளோம். யூதேயா மற்றும் சமாரியாவில் யூதக் குடியேற்றத்தை இரட்டிப்பாக்கி வருகிறோம்; இதே பாதையில் தொடர்வோம் என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.