திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., நடிகர் விஜய் அரசியலுக்குள் வந்தது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், அவர் தற்போது செயல்படுவது முறையான எதிர்க்கட்சியாக இல்லையெனக் கருத்து தெரிவித்தார். “விஜய் படித்தவர், அவருடன் இளைஞர் பட்டாளமும் இருக்கிறது. ஆனால், பொதுவாக அனைவரையும் குறை கூறுவது சரியான நடைமுறை அல்ல” என அவர் தெரிவித்தார்.
தற்போது முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இருக்கிறார் என்பதையும், அதற்கான விவரங்களை தெளிவாக வெளியிட்டுள்ளார் என்பதையும் துரை வைகோ குறிப்பிட்டார். “ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எந்த நிறுவனங்கள், எங்கு முதலீடு செய்ய உள்ளன என்பதற்கான முழு விவரங்களும் முதல்வர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் விஜய் அந்த பயணத்தை விமர்சிப்பது, அவரது அரசியல் களத்தில் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும்” என அவர் எச்சரித்தார்.
அதிமுக-பாஜக இடையேயான உடன்பாடுகள் பற்றியும் துரை வைகோ கருத்து தெரிவித்தார். “அவர்கள் திடீரென கூட்டணி சேர்கிறார்கள், அதேபோல திடீரென சிலர் வெளியேறுகிறார்கள். இது பற்றி விளக்கம் அவர்களிடமே கேட்க வேண்டும்” என கூறினார். தற்போது தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் எழுந்துள்ள நிலையில், விஜயின் அரசியல் நடைமுறை குறித்து எதிர்பார்ப்பும், விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன.