தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று துர்கை கோலத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசை தசரா திருவிழா உலகின் கவனத்தை ஈர்த்து வரும் வகையில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல்லக்கில் கொடிப்பட்டம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு ரதவீயை சுற்றி வந்தது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 5.36 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் பட்டர் அய்யப்பன் திருக்கொடியேற்றினார். கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என பரவசமாக கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு இளநீர், தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.
விரதம் இருந்த பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க தொடங்கினர். காலை, இரவு நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இரவில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 உதவி போலீஸ் சூப்பிரண்டு, போலீசார், ஊர்க்காவல் படை உள்பட 850-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?