கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் 'வானதி சீனிவாசன்' பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. குறைப்பு அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைந்து உள்ளது.
இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வரி குறைப்பு நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் முக்கியமான முன்னேற்றம்.ஆனால் சில வியாபாரிகள் பழைய விலையில் பொருட்களை விற்கும் சாத்தியம் உள்ளது. எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது விலையை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
வணிக நிறுவனங்களும் விலை வித்தியாசப்பட்டியலை வெளிப்படையாக வைக்க வேண்டும். இந்த வரி குறைப்பால், தீபாவளி மிச்சத்தில் பெண்கள் கூடுதலாக 2 சேலைகளை வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.ஜி.எஸ்.டி. குறைப்பை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் பார்வையாளராகவே இருக்கிறார்.
ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்ததால்தான் ரூ.12 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது.தமிழகத்தில் திமுகவை வீழ்த்தும் சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கே உண்டு. பாஜகவில் எந்தக் கோஷ்டி பூசலும் இல்லை. அண்ணாமலை கூட்டணியை பலப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்" என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.