நவராத்திரியின் முதல் நாளே ஹூண்டாய் மோட்டார் இந்தியா திருப்பம் காட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே நாளில் ஒரே நிறுவனத்தால் இதுவரை இல்லாத அளவில் சுமார் 11,000 கார்கள் விற்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை ஜிஎஸ்டி 2.0 புதிய விலை மாற்றங்களின் முதல் நாளில் வந்துள்ளது.
செப்டம்பர் 22-ஆம் தேதி, ஹூண்டாய் தனது அனைத்து மாடல்களுக்கும் பண்டிகைக் கால சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தியது. இதனால் விற்பனை பெருக்கம் கண்டது. குறிப்பாக கிரெட்டா, அல்காசர் போன்ற எஸ்யூவி மாடல்கள் முன்னணி வகித்தன. கிரெட்டா என்-லைன் மற்றும் ஸ்டாண்டர்டு மாடல்களுக்கு ரூ.71,762 முதல் ரூ.72,145 வரை விலை குறைப்பு வழங்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு கிடைத்துள்ளது.
அல்காசர் மாடல்களுக்கு ரூ.75,376 வரை விலை குறைப்பு, பிரீமியம் வகை டூஸான் எஸ்யூவிக்கு ரூ.2.40 லட்சம் வரை சலுகை, வென்யூ காம்பாக்ட் எஸ்யூவி ரூ.1.23 லட்சம் வரை, i20 மற்றும் எக்ஸ்டர் மாடல்களுக்கு முறையே ரூ.98,053 மற்றும் ரூ.89,209 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் i10 நியோஸ், ஆரா போன்ற என்ட்ரி லெவல் கார்களுக்கும் விலை குறைப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு, நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வழங்குவதில் உறுதியாக இருக்கிறது. ஹூண்டாயின் முழுநேர இயக்குநரும் சிஓஓ தருண் கார்க், இந்த சாதனையை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச ஒருநாள் செயல்திறன் எனக் குறிப்பிடுகையில், பண்டிகைக் காலத்துக்கான எதிர்பார்ப்புகளும் மிகவும் உற்சாகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.