விஜய்யின் திமுக வெறுப்பு அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது: திருமாவளவன்
Webdunia Tamil September 25, 2025 05:48 AM

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விஜய்யின் அரசியல் என்பது தி.மு.க. எதிர்ப்பு அரசியல் மட்டுமல்ல, அது வெறுப்பு அரசியல் என்றும், அது மக்களிடையே எடுபடாது என்றும் விமர்சித்துள்ளார்.

பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பது இயல்புதான் என்றும், விஜய்க்கு இது புதிதாக இருக்கலாம் என்றும், ஆனால் தங்கள் கட்சிக்கு இது 35 வருடங்களாக பழகிவிட்டது என்றும் கூறினார்.

விஜயின் பேச்சு தி.மு.க. மீதான வெறுப்பை அரசியலாக முன்வைப்பதாக குறிப்பிட்ட அவர், "எதிர்ப்பு என்பது வேறு, வெறுப்பு என்பது வேறு" என்றார். தனது கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி பேசுவதை விட, தி.மு.க. அரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விஜய் முன்னிறுத்துவதாக அவர் கூறினார்.

மக்களுக்கு, விஜய் தனது கட்சி மூலம் என்ன செய்யப்போகிறார் என்பதை பற்றிய செயல் திட்டங்கள் குறித்து அறியவே ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை என்றும் திருமாவளவன் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.