``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்
Vikatan October 14, 2025 02:48 AM

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, அஞ்சாரியா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இத்தகைய உத்தரவைத் தொடர்ந்து வி.சி.க எம்.பி ரவிக்குமார், ``பா.ஜ.க நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" என்று விமர்சித்திருக்கிறார்.

கரூர் நெரிசல் வழக்கு

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டில் ரவிக்குமார், ``விஜய் தரப்பின் மனு மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பா.ஜ.க-வின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன்.

நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பா.ஜ.க சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம்.

தி.மு.க-வுக்குச் செல்லும் சுமார் 14 சதவிகித மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து தி.மு.க-வுக்குப் பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மகாராஷ்டிரா மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம்.

அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய். பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்பதும், தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் (இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள்.

பா.ஜ.க அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அ.தி.மு.க வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பா.ஜ.க - விஜய் நோக்கமும் தோற்றுவிடும்.

எனவே, பா.ஜ.க அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பா.ஜ.க திட்டமிடும் எனக் கருதுகிறேன்.

பா.ஜ.க-வினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.