பீகார் மாநிலத்தில், 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இண்டி கூட்டணி, ஜனசக்தி ஜனதா தளம், பிரசாந்த் கிஷோரின் கட்சி, ஓவைசியின் கட்சி என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வறுத்தால், பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் நிதிஷ்குமாருடன் கைகோர்த்துள்ள பாஜகவுக்கு அக்கூட்டணியில் 101 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சியினர் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர்.
முதலில் 71 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக, இன்று 12 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கட்சியில் இணைந்த ஒரேநாளில், பிரபல பாடகி மைதிலி தாக்கூருக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது. இவர் நேற்றையதினம் பாட்னாவில் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் முன்னிலையில், கட்சியில் முறையாக இணைந்தார். இன்று தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த மைதிலி தாக்கூர்?
மைதிலி தாக்கூர், மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதானவர். நாட்டுப்புறப் பாடல்களால் பிரபலமானவர். 2017ஆம் ஆண்டில், இளம் பாடகி 'ரைசிங் ஸ்டார்' என்ற பாடல் ரியாலிட்டி ஷோவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அதன் மூலம் பிரபலமாக அறியப்பட்ட இவர், 2021-ஆம் ஆண்டு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். மைதிலியின் பிரபலத்தால் மிதிலாஞ்சல் பகுதியில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என கட்சி நம்புகிறது.
இதுகுறித்து மைதிலி தாக்கூர் கூறுகையில், 'பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, அவர்களுக்கு ஆதரவளிக்க நான் இங்கே வந்துள்ளேன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தாலே அரசியலுக்கு வந்தேன்' என்று தெரிவித்துள்ளார். 'மிதிலாவின் மகள்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் மைதிலி, தனது வேர்களும் அடையாளமும் தனது தாய்நாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளதாகவும், தன் ஆன்மா மிதிலாவில் வசிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.