திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்
WEBDUNIA TAMIL October 17, 2025 06:48 AM

அதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

விலைவாசி உயர்வுகளால், தமிழக மக்கள் தலையில் வரிச் சுமைகளைச் சுமத்தி, சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது இந்த திமுக அரசு. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசோ, மக்களைக் காப்பாற்றாமல், அவர்களை புதைகுழியில் தள்ளியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள்விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், அதிமுக பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது."

"வருகின்ற 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும், கழகத்தின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. கழகம் 54 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்."

"தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள இந்த திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி; அல்லும் பகலும் கண்துஞ்சாது களப் பணியாற்றி, பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்திட இந்த இனிய நன்னாளில், நாம் அனைவரும் உளமார உறுதியேற்போம்" என்றும் கூறியுள்ளார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.