சித்தோடு அருகே மேம்பாலத்திற்கு அடியில் தங்கி சீமார் பின்னும் தொழிலாளியின் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அடியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் டென்ட் போட்டும், கொசுவலை கட்டியும் தங்கி, சீமார் பின்னுவது உள்ளிட்ட பல்வேறு கூலித்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லுரை சேர்ந்த வெங்கடேஷ்- கீர்த்தனா தம்பதியினர் மேம்பாலத்திற்கு அடியில் தங்கி சில ஆண்டுகளாக சீமார் பின்னி விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் மற்றும் இரண்டு வயதில் வந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று இரவு வழக்கம்போல் கொசுவலை கட்டி தனது குடும்பத்தினர் உறங்கி கொண்டிருந்துள்ளனர், திடீரென அதிகாலை சுமார் இரண்டு மணி அளவில் விழித்துப் பார்த்தபோது தங்களுடன் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை வந்தனா காணாமல் போனது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பகுதிக்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குழந்தை கடத்தப்பட்டதா அல்லது எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேம்பாலத்திற்கு அடியில் தங்கி இருந்த சீமார் பின்னும் தொழிலாளியின் இரண்டு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.