நம் தமிழகத்தை பொறுத்தவரை 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. இந்த காலமே தமிழகத்தின் முக்கியமான மழைக்காலம். தமிழகத்தின் பெருமளவு தண்ணீர் தேவையை இந்த பருவ காலத்தில் பெய்யும் மழைநீரை கொண்டே பூர்த்தி செய்கிறோம்.இந்த மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிப்பது, மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்வது, மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது போன்றவையே நாம் எதிர் கொள்ள வேண்டியவை.
அதே போல் இடி மின்னல் தாக்கும் போது நாம் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இடி, மின்னல் ஏற்படும் போது தங்களால் எவ்வளவு முடியும் அந்தளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்துக்கொள்ளுவது, மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும். ஆனால், தரையோடு தரையாக படுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகு தான் மனிதர்களின் உடலில் அதன் தாக்கம் ஊடுருவும்.
இடி, மின்னல் ஏற்படும் போது திறந்த வெளியில் நிற்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம், உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும்
முடிந்தவரை தரையோடு நேரடி தொடர்பு குறைவாக இருக்கம் வகையில், குதிக்கால்கள் தரையில் படாமல் குனிந்து அமர்வதே மிக சிறந்த தற்காப்பு முறையாகும். இடியின் போது இரண்டு காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
திறந்தவெளியில் இருக்கும்போது உயரமான இடத்தைக் காட்டிலும் தாழ்வான இடத்தில் இருப்பதே பாதுகாப்பானது. கட்டத்திற்குவெளியே இருப்பதைக் காட்டிலும் உள்ளே இருப்பதே சிறந்தது
இடி,மின்னலின் போது நிச்சயம் ஆறு,குளம் போன்ற நீர்நிலைகளில் இருக்கக் கூடாது. குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது. மேலும், கொடிக்கம்பம், செல்போன் கோபுரங்ள் போன்றவற்றுக்கு அடியில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்
மின்னல் ஏற்படும் போது செல்போன், தொலைபேசியினை ஆஃப் செய்து வைப்பது நல்லது. டி.வி. மிக்ஸி, கிரைண்டர், கணினி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உபயோகத்தில் இல்லாத போது சுவிட்சுகளை அணைத்து வைக்க வேண்டும்.
மின் வாரியத்தின் மின்மாற்றிகள், துணை மின்நிலையத்துக்கு போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிப்பதையும், அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
மின்கம்பங்கள், அவற்றைத் தாங்கும் கம்பிகளை தொடுவதையும், மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்கவும். மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணி அடிக்க வேண்டாம்