தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகப்பெருமான். அவனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் அமைந்துள்ளது. இப்படியான முருகப்பெருமான் உலகம் முழுவதிலும் பிரபலமான தெய்வமாக திகழ்கிறார். முருகனுக்கு உகந்த ஏராளமான விசேஷ நாட்களில் மிக முக்கியமானது சஷ்டி திருவிழா. ஒவ்வொரு மாதமும் சஷ்டி திதி வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வந்தாலும் ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியானது மகா சஷ்டி என கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மகா சஷ்டியானது அக்டோபர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 27ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை நினைத்து விரமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள். அப்படியானவர்கள் முருகனை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.
விரதம் இருக்கும் முறைகள்
- விரதம் தொடங்கும் பக்தர்கள் அக்டோபர் 21ஆம் தேதி பூஜை அறையை சுத்தம் செய்து முருகப்பெருமான் புகைப்படம் அல்லது சிலையை ஒரு மனை பலகை மீது வைத்து மறுநாள் விரதம் தொடங்கும் முன் செய்யப்படும் வழிபாட்டுக்குரிய பூஜை பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
- சஷ்டி தொடங்கும் நாளில் அதிகாலையில் இருந்து புனித நீராடி இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டும். அப்போது முருகப் பெருமானுக்குரிய மந்திரம், பாடல்கள் என எதையாவது பாராயணம் செய்ய வேண்டும். எதுவுமே தெரியாது என சொல்கிறவர்கள் ஓம் சரவணபவ என்ற திருமந்திரத்தை உச்சரித்தாலே போதுமானது.
Also Read: 7 மாதம் மட்டுமே திறந்திருக்கும் முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?
- முடிந்தவர்கள் இந்த ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். ஒருவேளை பிற நாட்கள் முடியாவிட்டாலும் ஆறாவது நாள் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
- விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் முருகனுக்கு உகந்த வெற்றிலை தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் பசு நெய்யில் தீபம் ஏற்றலாம். விளக்கேற்றும் போது ஏதேனும் உங்களால் முடிந்த இனிப்பு பொருட்களை பிரசாதமாக படைக்கலாம்.
- இந்த ஆறு நாட்களும் வீட்டில் மது, மாமிசம் போன்றவை அறவே இடம்பெறக் கூடாது. அசைவ உணவுகளை வெளியில் இருந்து வாங்கி வரவும் கூடாது.
Also Read: பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கும் வெற்றிவேல் முருகன் கோயில்!
- பணிக்கு செல்பவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் ஆறு நாட்களும் இருவேளை உணவு எடுக்க முடியாமல் விரதம் இருக்க முடியாது என்றால் அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒருவேளை விரதம் இருந்தால் போதுமானது.
- மாதவிடாய் ஏற்படும் விஷயத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் விரத நாட்களில் விளக்கேற்றாமல் விரதத்தை உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாமல் தொடரலாம். மற்றவர்கள் வழக்கம்போல் விரதத்தை கடைபிடிக்கலாம்.
- ஆறாம் நாளில் முருகன் கோயிலில் நடக்கும் சூரசம்ஹாரத்தைப் பார்த்த பிறகு கோயிலில் வழிபட்டும், வீட்டிற்கு வந்து விளக்கேற்றியும் விரதத்தை முடிக்கலாம்.
சஷ்டியில் நாம் விரதம் மேற்கொண்டால் முருகப்பெருமான் நாம் கேட்டதெல்லாம் கொடுப்பார் என்பது நம்பிக்கையாகும். குறிப்பாக சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களால் அதிகளவில் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)