கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பு அதாவது 2022ம் வருடம் வெளியாகி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் பஞ்சுருளி தெய்வத்தை காட்டி இருந்த விதமும், அதற்கான ஒலி அமைப்பும் ரசிகர்களை மிகவும் கவர படம் சூப்பர் ஹிட் அடித்தது. வெறும் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அந்த படம் 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
காந்தாரா படத்தை தயாரித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனமே தற்போது காந்தாரா 2 படத்தையும் தயாரித்திருக்கிறது. Kantara Chapte 1 என்கிற தலைப்பில் வெளியான இந்த படம் கடந்த 2ம் தேதி வெளியானது. முதல் பாகத்தை போலவே ரிசப் ஷெட்டியே இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக மூன்று வருடங்கள் கடுமையாக பணியாற்றி இருக்கிறார் ரிசப் ஷெட்டி.
இந்த படத்தின் சண்டைக் காட்சிகள், போர் காட்சிகள், பஞ்சுருளி தெய்வம் காட்டப்படும் காட்சிகள் என எல்லாமே அசத்தலாக வந்திருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் உள்ள VFX காட்சிகள் பாராட்டை பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்ததால் இந்த படம் நல்ல பெற்று வருகிறது. குறிப்பாக ஹிந்தியில் இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கான வசூல் அதிகரித்துக் கொண்டே போனது. படம் வெளியாகி ஒருவாரத்திலேயே இப்படம் 500 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்நிலையில் படம் வெளியாகி 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இப்படம் 712.50 கோடி வசூல் செய்திருப்பதாக ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.