இன்ஸ்டாவில் பழகிய இளைஞரை நம்பி சென்னைக்கு சென்ற பெண்... இறுதியில் ட்விஸ்ட்
Top Tamil News October 18, 2025 03:48 PM

இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்ற இளம்பெண், தன்னைக் காப்பாற்றும் படி தங்கைக்கு போன் செய்து கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி சாந்தி (44). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாந்தி தனது பிள்ளைகளுடன், நாகர்கோவில் தட்டான்விளை பகுதியில் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகள் சிந்து (23). இவரை வடசேரி வாத்தியார் விளையை சேர்ந்த கலையரசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது  குடும்ப தகராறு காரணமாக, சிந்து தனது கணவரை பிரிந்து மாமியாருடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி மாலை, சிந்து சென்னை செல்வதாக கூறி சென்றார். பின்னர் திடீரென தனது தங்கைக்கு போன் செய்து, தன்னை காப்பாற்றும் படியும், தனது உயிருக்கு ஆபத்தாகி விட்டது என கூறி உள்ளார். பின்னர் சிந்துவின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இது குறித்து  சிந்துவின் தாயார் சாந்தி, நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிந்து, சமூக வலை தளத்தில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு நிறைய ஃபாலோயர்கள்  இருந்துள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த ஒருவருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை ஏற்கனவே சிந்துவின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் சென்னை செல்வதாக கூறி சென்றவர் தற்போது தன்னை காப்பாற்றும் படி கூறி விட்டு மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிந்து யாருடன் சென்றார்? அவரை வேண்டும் என்றே கடத்தி சென்று விட்டார்களா அல்லது வேறு காரணம் உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிந்து திடீரென நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் தாயாருக்கும் தகவல் கொடுத்தனர். காவல் நிலையத்திற்கு சென்ற தாயார் மகள் சிந்துவை அழைத்து சென்றார். இன்ஸ்டாகிராமில்  சிந்துவுடன் பழக்கத்தில் இருந்த அந்த நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.