1954-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி காலை புதுச்சேரியின் கீழூர் கிராமத்தில் ஒரு கொட்டகையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். அது ஒரு சாதாரண கிராம கூட்டம் இல்லை, புதுச்சேரியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வாக்கெடுப்பு அங்கு நடந்தது.
பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு கீழூர் கிராமத்தில் நடந்தது.
புதுச்சேரி பல நூற்றாண்டுகளாக பிரான்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் முதன்முதலில் 1673-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தனர். பின்னர் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளையும் வாங்கியது.
இந்தியாவுக்கு 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது பிரான்ஸ் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை.
''இந்தியாவில் இருந்து வெளியேற பிரெஞ்சுக்காரர்களுக்கு விருப்பமில்லை'' என்கிறார் புதுச்சேரியின் வரலாற்று ஆய்வாளர் முத்தையா.
இந்திய விடுதலைக்கு பிறகு, புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமாயின.
நகர சபையில் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஆதரவாக தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கிராமங்கள் பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக்கொண்டன. சுதந்திரம் பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கிராமங்களில் இந்திய தேசியக்கொடியையும் ஏற்றினார்கள் என்கிறது புதுவை அரசின் 'புதுச்சேரி விடுதலை இயக்கம்' தகவல் தொகுப்பு.
''மக்கள் போராட்டங்களை பிரான்ஸ் அரசு ஒடுக்கவே நினைத்தது. இருப்பினும் எச்சரிக்கையாக இருந்தது. புதுச்சேரியில் இருந்து வெளியேறுவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பியது'' என்கிறார் முத்தையா.
1948-ஆம் ஆண்டில் பிரான்ஸ் - இந்தியா இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள மக்களே தாங்கள் அரசியல் ரீதியாக எந்த நாட்டில் சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம் என்று அந்தஒப்பந்தம் கூறியது.
அனால், பல ஆண்டுகள் கடந்த பிறகும் இது குறித்து பிரான்ஸ் அரசு ஒரு நிலையான முடிவை எடுக்கவில்லை என கூறுகிறார் முத்தையா
ஓரு பக்கம் விடுதலை போராட்டங்கள் நடந்த நிலையில், மறுபக்கம் தமிழர்களான புதுச்சேரி மக்கள் ஒரு வித்தியாசமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.
''1954-ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரி விடுதலை போராட்டம் மிகக் கடுமையாக இருந்தது. விடுதலையை ஆதரித்த மக்கள் பிரதிநிதிகள் சிலரை புதுச்சேரி அரசில் இருந்து பிரான்ஸ் நீக்கியது. இந்தியர்கள் புதுச்சேரிக்குள் வர தடையும் விதித்தது. இதற்கு பதிலடியாக இந்திய அரசு, இந்திய பாஸ்போர்ட் விதி 1950 கீழ் பிரெஞ்சு பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பயண விதிவிலக்கு அனுமதிகளை ரத்து செய்தது'' என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தவரும், புதுச்சேரி - பிரான்ஸ் தொடர்பு குறித்த ஆய்வாளருமான முனைவர் சக்திவேல்.
இதனால் பிரான்ஸ் புதுச்சேரி மக்கள் இந்தியாவுக்குள் நுழைய 'விசா' போன்ற அனுமதி சீட்டு பெற வேண்டும் என இந்திய அரசு அறிவித்தது.
''புதுச்சேரியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி, பிரெஞ்சு நிர்வாகம் புதுச்சேரி குடிமக்களுக்கு வழங்கிய அடையாளச் சான்றிதழ் அடிப்படையில், 'ஒருமுறை பயண அனுமதி விசா' (single journey visa) வழங்குவார். அதை பெற்றால் மட்டுமே புதுச்சேரி மக்களால் அருகில் உள்ள இந்திய கிராமங்களுக்கு கூட செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
புதுச்சேரி மூன்று பக்கமும் தற்போதைய தமிழ்நாட்டால் (அப்போது மெட்ராஸ் மாகாணம்) சூழப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களும், தமிழ்நாட்டு மக்களும் ஒரே மொழி, உணவு, கலசார பின்னணியை கொண்டவர்கள்தான். எல்லையை ஒட்டியுள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு கூட விசா வேண்டுமென்றால் யோசித்து பாருங்கள்'' என்கிறார் சக்திவேல்.
இந்தியா இந்த 'விசா' கட்டுப்பாடுகளை கொண்டுவந்ததற்கு பல காரணங்கள் இருந்தன என்கிறார் அவர்.
''புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதற்கு புதுச்சேரியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். உதாரணமாக புதுச்சேரி செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்த சுமார் இருநூறு பிரெஞ்சு இந்தியர்கள், இந்திய பகுதியில் உள்ள சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி இந்திய போலீஸாரை தடுத்தனர். பிரான்ஸ் அரசு விடுதலை கோரும் போராட்டக்காரர்கள் இந்தியாவில் இருந்து புதுச்சேரிக்கு வருவதாக குற்றஞ்சாட்டியது. இதையெல்லாம் பார்த்த இந்தியா 'விசா' திட்டத்தை கொண்டுவந்தது'' என்கிறார் சக்திவேல்.
பெரும்பாலான மக்கள் புதுச்சேரி இந்தியாவுடன் இணைய விரும்புவதை இந்திய அரசு ஆதரிக்க விரும்பினாலும், பிரான்சுடன் நேரடி மோதலைத் தவிர்த்து, அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான இணைப்பை உறுதிப்படுத்த முயன்றது என்கிறார் அவர்.
''இந்த 'விசா' முறை மக்களின் தினசரி வாழ்க்கையை முடக்கியது. பிரான்ஸ் அரசுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாக இந்தியா மண்ணெண்ணெய், உணவு போன்ற சில பொருட்கள் புதுவைக்கு செல்வதை நிறுத்தியது.
அத்தியாவசிய பொருட்களை வாங்க, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க அல்லது சுற்றியுள்ள இந்திய பகுதிகளுடன் வர்த்தகம் செய்ய புதுச்சேரி மக்களுக்கு இந்திய ரூபாய் தேவையாக இருந்தது.
அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலும் இந்திய சந்தைகளிலிருந்து வந்தது. அங்கு இந்திய ரூபாயையே ஏற்றுக் கொண்டனர். ஆனால், புதுச்சேரியில் இந்திய ரூபாய் போதிய அளவு இல்லாததால், பிரெஞ்சு பணத்தை மாற்றுவது கடினமாக இருந்தது. மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர்'' என்கிறார் முத்தையா.
இந்த பொருளாதார அழுத்தம், பிரான்சுக்கு ஆதரவாக இருந்த சில மக்கள் பிரதிநிதிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்திய இணைப்புக்கு குரல் கொடுக்க வழிவகுத்தது என்கிறார் அவர்.
தற்போதும்கூட புதுவையின் பல கிராமப்புற பகுதிகள வித்தியாசமான இருப்பிடத்தை கொண்டுள்ளன. ஒரு கிராமத்தின் வடக்கு பகுதியும், தெற்கு பகுதியும் புதுச்சேரியாக இருக்கும், இதற்கு நடுவில் உள்ள பகுதி மட்டும் தமிழ்நாடாக இருக்கும்.
'விசாவால்' புதுவையில் இருந்து காரைக்கால், தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஏனாம், தற்போதைய கேரளாவில் இருக்கும் மாஹே ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பதும் சாமானிய மக்களுக்கு சாத்தியமற்றுப் போனது.
இவையெல்லாம் பிரான்ஸ் அரசுக்கு ஒரு வித அழுத்தத்தை கொடுத்தது என்றும், பிரச்னைகளை சுமூகமாக தீர்க்க விரும்புவதாக பிரான்ஸ் கூறிய பிறகு இந்த 'விசா' முறையில் இந்திய அரசு தளர்வுகளை கொண்டு வந்தது என்றும் சக்திவேல் கூறினார்.
இறுதியாக 1948-ஆம் ஆண்டு இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற 1954-ல் பிரான்ஸ் ஒப்புக்கொண்டது.
புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பது குறித்தான வாக்கெடுப்பு 1954 அக்டோபர் 18-ஆம் தேதி கீழூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 1950-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதில் பங்கேற்ற 178 பேரில் 170 பேர் புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளை நவம்பர் 1, 1954 முதல் இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தானது; புதுச்சேரி இந்திய ஆட்சியின் கீழ் வந்தது.
இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக 16 ஆகஸ்ட் 1963-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு