Perambalur: வீட்டு ஓனருக்கே ஷாக்.. 360 பவுன் நகை மோசடி செய்த தம்பதியினர்!
TV9 Tamil News October 18, 2025 04:48 PM

திருச்சி, அக்டோபர் 18: பெரம்பலூர் மாவட்டத்தில், தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் சுமார் 360 சவரன் தங்க நகைகளை கடனாக பெற்று மோசடி செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம் லெப்பைகுடிக்காடு ஜமாலியா நகரில் வசித்து வரும் பஷீர் அகமத் என்பவரது மனைவி உம்மல் பஜாரியா புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது கணவர் பஷீர் அகமத் துபாய் நாட்டில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகனுக்கு இன்னும் ஆகவில்லை. இதனிடையே கடந்த 2006 ஆம் ஆண்டு எங்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டோம்.

அந்த வீட்டில் பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிக்காட்டை சேர்ந்த பஜிலுல் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி பர்வீன் பானு ஆகியோர் வாடகைக்கு வந்தனர். வந்த நாள் முதல் என்னுடன் பர்வீன் பானு நன்றாக பழகினார். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அப்போது கடனாக பணம் பெற்று நேர்மையாக திருப்பித் தந்தார். இதன் பின்னர் தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி பர்வீன் பானு என்னுடைய என்னிடம் ரூபாய் ₹8.80 லட்சத்தை ரொக்கமாகவும், ₹6. 20 லட்சத்தை காசோலையாகவும் பெற்று செல்போன் கடையை தொடங்கினார்.

இதையும் படிங்க:  பல ஆண்களை திருமணம் செய்து மோசடி.. சிக்கிய காஜல்!

பின்னர் ஒரு கட்டத்தில் கடைக்கு புதிய செல்போன்கள் வாங்க வேண்டும் என்றும் குடும்ப சூழ்நிலையை கூறியும் மீண்டும் 80 பவுன் நகைகளை என்னிடம் பெற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல் துபாயில் இருக்கும் எனது தங்கை பரிதா பானுவின் லாக்கரிலிருந்த 196 பவுன் நகைகள், வி.களத்தூரில் வசிக்கும் எனது அக்கா நூருள் நிஷாவின் 84 பவுன் நகைகள் என மொத்தம் 360 பவுன் நகைகளை கடனாக பெற்றுக் கொண்டார்கள்.

இவற்றையெல்லாம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றனர். அதனைக் கொண்டு அவர்களுடைய மகள் அஃப்ரின் பானு திருமணத்தை 50 பவுன் நகைகள் போட்டு விமரிசையாக செய்து கொடுத்தார்கள். இந்த நிலையில் நகைகளை திருப்பி கேட்டால் அதனை தராமல் மோசடி செய்ததுடன் நாங்கள் அவர்களிடம் கடனை கேட்டு மிரட்டுவதாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் எங்கள் மீது புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு.. ஈரோட்டில் எலக்ட்ரிகல் கடை ஓனரிடம் ரூ.2.75 கோடி மோசடி

எனவே என்னிடம் உள்ள நகைகளை பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்துவரும் பஜிலுல் ரஹ்மான், பர்வீன் பானு, அவருடைய மகள்கள் நஸ்ரின் பானு, அஃப்ரின் பானு மற்றும் இதில் தொடர்புடைய சையது பாட்ஷா, சாரதி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பஜிலுல் ரஹ்மான் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் தம்பதியினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.