தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும். இந்த வருட தீபாவளியை பொறுத்தவரை விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அதே நேரத்தில் இளம் நடிகர்களான பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் ஆகியோரின் படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த மூன்று படங்களில் எந்த படத்தை பார்க்கலாம்? இந்த மூன்று படங்கள் தொடர்பான விமர்சனங்கள், ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி? முதல் நாள் வசூல் என்ன? ஆகியவற்றை பார்ப்போம்.
Dude: தீபாவளிக்கு பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான படமாக வந்திருக்கிறது Dude. அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
படத்தில் பெருசாக ஒன்றும் இல்லை. அதேநேரம் போர் அடிக்கவில்லை. சில காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஏற்ற கதை.. ஒருமுறை பார்க்கலாம்.. என்று பலரும் சொல்கிறார்கள். குறிப்பாக Gen Z என சொல்லப்படும் 20லிருந்து 25 வயது வரையுள்ள இளசுகள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள். ஒரு ஜாலியான படத்தை பார்த்து விட்டு வரலாம் என நினைக்கும் ரசிகர்கள் டியூட் படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம். முதல் நாள் இப்படம் 10 கோடி வசூல் செய்திருக்கிறது.
Bison: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து ஒரு சீரியஸ் சினிமாவாக வெளிவந்திருக்கும் படம்தான் பைசன். தென் மாவட்டத்தை சேர்ந்த மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் 30 வருடங்களுக்கு முன்பு தென் மாவட்டத்தில் இரு சாதியினிரிடம் இருந்த மோதல் ஆகிய இரண்டையும் அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
துருவுக்கு பைசன் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. அவரும் மிகவும் கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார். சீரியஸான, சமூக கருத்துக்களை கொண்ட திரைப்படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் பைசன் படத்தை தாராளமாக பார்க்கலாம். முதல் நாள் இப்படம் 2.50 கோடி வசூல் செய்திருக்கிறது.
Diesel: இதுவரை காதல் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக நானும் ஆக்சன் ஹீரோ என டீசல் படம் மூலம் களமிறங்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். இது இவரின் முதல் திரைப்படம்.
வடசென்னை பகுதிகளில் டீசல் திருடி மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு கேங்ஸ்டர், அதற்கு போட்டியாக வரும் ஒரு கும்பல், அப்பாவுக்காக களமிறங்கும் ஹரிஷ் கல்யாண் என ஒரு பரபரப்பான ஆக்சன் கதை என்றாலும் சொல்லிய விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
அதேநேரம் படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாகவே வந்திருக்கிறது. ஹரிஷ் கல்யாணும் புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார். ஆக்சன் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக பிடிக்கும். இப்படி தீபாவளி ரிலீஸில் 3 படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் எந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் படமாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதல் நாள் இப்படம் 30 லட்சம் வசூல் செய்திருக்கிறது.