ரூ.13,000 கோடி வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய மெஹுல் சோக்சி; இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் உத்தரவு..!
Seithipunal Tamil October 18, 2025 08:48 PM

13,000 கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர். அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-இல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019-இல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018-இல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, அவர், தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார்.  அவர் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். பின்னர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார். இதற்கிடையே, மத்திய அரசு, அவரை நாடு கடத்தும் முயற்சியை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையின் பேரில் வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்நிலையில், சோக்சியை நாடு கடத்தும் முயற்சிக்கு  உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.