தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து சொந்த ஊர்களுக்குப் புறப்படும் மக்களின் பெரும் திரளால் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று களைகட்டியுள்ளது. இதற்காக அரசு சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது.நேற்று வழக்கமான 2,092 பஸ்களுடன் கூடுதலாக 760 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இன்று (17ம் தேதி) பயணிகள் பெருமளவில் புறப்படுவதை முன்னிட்டு 2,165 சிறப்பு பஸ்கள், நாளை 1,935 பஸ்கள், 19ம் தேதி 1,040 பஸ்கள் என மொத்தம் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், பயணிகள் நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 9 நடைமேடைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பஸ்கள் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாய்மார்களுக்கான தனி பால் ஊட்டும் அறைகள், அவசர மருத்துவ பிரிவு, உணவகங்கள், பிரீபெய்டு ஆட்டோ-கார் வசதிகள் உள்ளிட்ட பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களிடம் வசதிகள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார். ஆய்வில் தலைமைச் செயலாளர் பிரின்ஸ்லி ராஜ்குமார், போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.