ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலை முடி இருந்த நிலையில், அந்த உணவை உட்கொண்ட பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுந்தர பரிபூரணம் என்ற பயணி கொழும்புலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமான மூலம் பயணம் செய்தபோது அவருக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் தலைமுடி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணி விமானத்தில் உள்ள ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பயணிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசரணைக்கு வந்தது. அப்போது, ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில், விமானத்தில் வழங்கப்பட்ட உணவு சுகாதார இல்லாமல் இருந்ததற்கு வருந்துவதாகவும், விமானத்தில் வழங்கப்பட்ட உணவு சென்னை அம்பாசிட்டர் பல்லவா ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவு என்றும் அந்நிறுவனத்தை வழக்கில் சேர்க்க வேண்டும், சுகாதர மற்ற வகையில் உணவு இருந்ததற்கு விமான நிறுவனம் பொறுப்பல்ல என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, விமான நிறுவனம் அலட்சியமாக இருந்துள்ளது, தனது பொறுப்பை உணவு நிறுவனத்திற்கு மாற்ற முயற்சித்துள்ளது எனவே விமான நிறுவனம் 35 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக பயணிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.