பொன்னேரி அருகே முட்புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் இருந்து திருநிலை செல்லும் சாலையில் முட்புதர் ஒன்றில் இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் பார்த்த சென்று போது தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டனர். பிறந்து சில மணி நேரமே உள்ள ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்டு சென்றிருந்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்ட காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகாத உறவில் ஏற்பட்ட குழந்தை என்பதால் சில மணி நேரத்திற்கு முன் தாயே சுயமாக பிரசவித்து தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை வீசி சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.