தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வானிலை ஆய்வாளர்கள் தகவலின்படி, அடுத்த 10 நாட்களுக்குள் மேலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. வருகிற 24ஆம் தேதி உருவாகும் என கூறப்பட்ட தாழ்வு பகுதி, முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பருவமழை நிலைமை மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் பற்றி அவர் விரிவாக கேட்டறிந்தார்.
மழை காரணமாக நீர் தேங்குதல், மின் விநியோக கோளாறு, பள்ளிகள் மூடல் போன்ற அவசர சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான மனிதவளமும் கருவிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.