புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள இருளை காங்கிரஸ் அகற்றும்.. வைத்திலிங்கம் MP தீபாவளி வாழ்த்து!
Seithipunal Tamil October 21, 2025 02:48 AM

 புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள இருளை காங்கிரஸ் அகற்றும் என்று  வைத்திலிங்கம் (எம்.பி, காங்கிரஸ்  மாநில தலைவர்) தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வாழ்த்து செய்தியில் கூறியதாவது:புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, மேலும் தெய்வீகத்தின் ஆதரவு மற்றும் வெற்றியை குறிக்கும் விழா. தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் ஒரு பண்டிகையும் ஆகும். உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவராலும் தீபாவளி திருவிழா மகிழ்ச்சி மற்றும் ஆராவரத்துடன் கொண்டாடப்படுகிறது. இல்லத்தில் விளக்குகள் ஏற்றி ஒளியை பரப்புவதைப்போல் நம் உள்ளத்திலும் தீய எண்ணங்கள் கொண்ட இருளை அகற்ற அறம் என்னும் ஒளியை ஏற்றுவோம்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்திலும் இருள் உள்ளது. ஆட்சியாளர்களுக்குள் ஒற்றுமை இல்லை, ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கும் ஒற்றுமை இல்லை. ஆளும் கட்சிக்குள் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களுக்குள்ளும் ஒற்றுமையில்லை. அவர்களே ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை மாறி, மாறி கூறி புதுச்சேரியை இருளில் தள்ளிவிட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள இருளை காங்கிரஸ் அகற்றும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுளை தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தியில் ..

மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த நன்னாளில் மக்கள், மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த தீப ஒளித் திருநாளில், மக்கள் வாழ்வில்  துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று புரட்சித்தலைவி அம்மா கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் ஆகியோரின் வாழ்த்துக்களோடு தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.