Bison: எதிர்ப்பு வந்தாலும் வசூலில் எகிறும் பைசன்!.. 4 நாள் கலெக்ஷன் அப்டேட்!..
CineReporters Tamil October 21, 2025 06:48 PM

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் பைசன் காளமாடன்.  ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாரி செல்வராஜ் தான் சந்தித்த பிரச்சனைகளை, ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த அடக்குமுறைகளை தனது திரைப்படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இவரின் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய எல்லா படங்களுமே விவாதங்களை ஏற்படுத்தியது. கடந்த பல வருடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிரீதியாக சந்தித்த பிரச்சனைகளே மாரி செல்வராஜின் கதைக்களமாக இருக்கிறது.

தென் மாவட்டத்த சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் பல வருடங்களுக்கு முன்பு இருந்த இரு சாதி தலைவர்கள் தொடர்பான சம்பவங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பைசன் படத்தை உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் நடிப்பதற்காக 2 வருடங்களுக்கும் மேல் கபடி பயிற்சி எடுத்தார் துருவ் விக்ரம்.

இந்த படத்தில் இயக்குனர் அமீர், லால், பசுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். துருவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். பைசன் படம் வெளியான முதள் நாளில் இருந்தே ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 16 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இந்த படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ரசிகர்களின் ஆதரவால் ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.