இடமாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
TV9 Tamil News October 21, 2025 06:48 PM

வானிலை நிலவரம், அக்டோபர் 21, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 ஆம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக குமரி, நெல்லை, தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று, அதாவது அக்டோபர் 21, 2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

மேலும், வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தாழ்வு பகுதி உருவாகும் இடம் மாறியுள்ளது. முன்னதாக தென்கிழக்கு வங்ககடலில் உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பட்டாசு வெடிப்பதில் போட்டி – இரும்பு ராடால் இளைஞர் அடித்துக்கொலை – என்ன நடந்தது?

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 21, 2025 அன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு

அக்டோபர் 22, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை:

அதே சமயம் கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரவிருக்கும் சில நாட்களுக்கு கனமழை பதிவு ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.