செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் அதன் 'சாட்பாட்' சேவைகளின் அதிகரிப்பு காரணமாக, உலகெங்கிலும் உள்ள அறிவு தளமான விக்கிப்பீடியாவின் பயன்பாடு சரிவை கண்டுள்ளது.
விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை அதன் பக்கங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை 8 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக, ஏ.ஐ. தேடுதல் கருவிகள் அதிகரித்திருப்பதும், பயனர்கள் தகவல்களை தேடும் முறை மாறியிருப்பதும் கூறப்படுகிறது. ஏ.ஐ. தளங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் சந்தேகங்களுக்கு பதில்கள் அதிக அளவில் கிடைப்பதால், பயனர்கள் விக்கிப்பீடியாவை நாடுவதைக்குறைத்துள்ளனர்.
மேலும், ஏ.ஐ. சாட்பாட்கள் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை கொண்டே தருவதால், பயனாளர்கள் நேரடியாக விக்கிப்பீடியாவை பார்க்க வேண்டிய தேவை குறைந்துவிட்டது.
குறிப்பாக, இளைய தலைமுறையினர் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தேட, நேரடியாக சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பக்கங்களை நாடுவது அதிகரித்துள்ளது.
எனினும், அதிக மொழிகளிலும், ஆழமான கூடுதல் தகவல்களையும் வழங்குவதில் விக்கிப்பீடியா தொடர்ந்து ஒரு முக்கிய ஆதாரமாகவே நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Edited by Siva