நாடு முழுவதும் இன்று தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதன் பின்னர் ஒரு கவலைக்கிடமான நிலை உருவாகியுள்ளது.சென்னை மற்றும் டெல்லி நகரங்களில் காற்று மாசு அளவு சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் காற்று மாசு 400ஐ கடந்துள்ளது, சில பகுதிகளில் 999 எனக் கூடக் காட்டியுள்ளது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் காற்று மாசு 500ஐ கடந்துள்ளதால், மக்கள் கடுமையான சுகாதார அபாயங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
சுவாச கோளாறு, கண் எரிச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் டெல்லி மற்றும் சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளன.
காற்று தரம் (Air Quality Index) 0 முதல் 500 வரை அளக்கப்படுகிறது.
0 முதல் 50 வரை இருந்தால் காற்று நலமாகும்.
51 முதல் 100 வரை மிதமானது.
101 முதல் 200 வரை மாசடைந்தது.
201 முதல் 300 வரை மோசமானது.
301 முதல் 400 வரை மிகவும் மோசமானது.
அதேபோல் 401 முதல் 500 வரை இருந்தால், அது மிகக் கடுமையான காற்று மாசு எனப்படுகிறது.
இந்த நிலையில் வெளியில் நீண்ட நேரம் இருப்பது கூட சுகாதாரத்துக்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இந்த தீபாவளியில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் விளைவாக காற்று மாசு திடீரென அதிகரித்து, நகரம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.
சென்னையிலிருந்து திருச்சி சென்ற இன்டிகோ விமானம் கூட, காட்சித் திறன் குறைந்ததால் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்படவில்லை என்றாலும், சுற்றுப்புற மாநிலங்களில் உருவான புகை மற்றும் தூசி, காற்றோட்டத்துடன் டெல்லியை சூழ்ந்துள்ளது.
சூழலியல் ஆர்வலர்கள் கூறுவதாவது —தற்போதைய காற்று மாசு அளவின்படி,சென்னை மக்கள் ஒவ்வொருவரும் 20 சிகரெட் பிடிக்கும் அளவுக்கு மாசு காற்றை சுவாசிக்கிறார்கள்,டெல்லி மக்கள் 30 சிகரெட் அளவுக்கு மாசு காற்றை சுவாசிக்கிறார்கள் என்கிறார்கள்.
தீபாவளி ஒளி திருநாளாக இருந்தாலும், அதன் பின் உருவாகும் புகை மூட்டம் நம் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது.பசுமையான தீபாவளியை நோக்கி நகர்வதே இதற்கான தீர்வாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.