டெல்லியைச் சேர்ந்த நிகிதா (25) என்பவர், கான்பூரில் சிமெண்டு தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபர் மஹானாவுடன் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வாழ்க்கை இனிதாக இருந்தாலும், மஹானாவின் தொழில் லக்னோவில் நஷ்டம் அடைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடங்கியது.
இதையடுத்து மஹானா தனது மனைவி நிகிதாவிடம் ரூ.15 லட்சம் தருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனுடன், நிகிதாவின் மாமியாரும் வரதட்சணை கேட்டு அவரைக் கொடுமைப்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த தீபாவளி விருந்து ஒன்றில் இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பியபோது, மீண்டும் பணம் தொடர்பான தகராறு ஏற்பட்டது. அதில் நிகிதா மனஉளைச்சலுக்கு ஆளாகி திடீரென மயங்கி விழுந்தார். இதே நேரத்தில், அவரது சகோதரி முஸ்கன் நிகிதாவுக்கு அழைத்தபோது, அவர் பேசாததும், மயக்க நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, “அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்” என்று மஹானாவிடம் வேண்டியிருந்தும், அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் நிகிதா துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், நிகிதா உயிரிழந்ததை அவரது கணவர் மற்றும் மாமியார், அவரது தாயிடம் தெரிவித்தனர்.
தங்கள் மகளின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், “வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, அடித்து கொன்று விட்டனர்” என குற்றஞ்சாட்டி போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் மஹானா மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
நிகிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வரதட்சணை காரணமாக மீண்டும் ஒரு இளம் உயிர் பலியானது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.