நிதிஷ் ரெட்டியை வாழ்த்தி தொப்பியை வழங்கிய ரோஹித்!இதை செஞ்சா ஆல் ஃபார்மட் கிரேட்டாக வருவ.. நிதிஷ் ரெட்டி நெகிழ்ச்சி!
Seithipunal Tamil October 21, 2025 09:48 PM

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தனது பயணத்தை தோல்வியுடன் தொடங்கியுள்ளது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாளில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்கொண்டது. இதனால், தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மழையால் 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இந்தியா பேட்டிங்கில் பெரிதும் சிரமப்பட்டு, 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவே இந்தியா தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் இந்தப் போட்டியில் ஒரு சிறப்பான தருணம் இருந்தது — இளம் ஆல்-ரௌண்டர் நிதிஷ் ரெட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர், அதன் மூலம் இந்திய டி20 அணிக்குள் நுழைந்தார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, காபா மைதானத்தில் சதமடித்து இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த சிறப்பான ஆட்டத்துக்குப் பிறகு, ஒருநாள் அணியிலும் வாய்ப்பு பெற்ற நிதிஷ் ரெட்டிக்கு, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தன் கையால் அறிமுகத் தொப்பியை வழங்கினார். அதன்போது ரோஹித் அவரை வாழ்த்தி கூறிய வார்த்தைகள், இப்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளன.

ரோஹித் கூறியதாவது:“தொப்பி நம்பர் 260 — நிதிஷ் ரெட்டி! இந்திய அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் அணுகுமுறையைப் பார்த்தால், நீண்ட பயணத்தில் நீங்களும் இந்திய அணியும் ஒன்றாக முன்னேறுவீர்கள் என்று 110% நம்புகிறேன். நீங்கள் ஒரு ‘ஆல் டைம் கிரேட் பிளேயராக’ மாறுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.”

அதுடன் அவர் மேலும் கூறினார்:“நேற்று நீங்கள் இந்திய அணியின் அனைத்து வடிவங்களிலும் விளையாட விரும்புகிறீர்கள் என்று சொன்னீர்கள். அதற்காக அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு சிறப்பான கேரியர் அமையட்டும்.”

இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்குப் பிறகு, தன் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நிதிஷ் ரெட்டி 10 பந்துகளில் 19 ரன்கள் (2 சிக்ஸர்கள் உடன்) குவித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தோல்வியடைந்தாலும், நிதிஷ் ரெட்டியின் இந்த உற்சாகமான அறிமுகம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்துக்கு ஒரு புதிய நட்சத்திரம் பிறந்தது என்ற உணர்வையும் அளித்துள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.