எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!
Webdunia Tamil October 23, 2025 01:48 AM

பீகாரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜன் சுராஜ் அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

பிரசாந்த் கிஷோர், பாஜக மீது அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது அமைப்பில் போட்டியிடவிருந்த மூன்று வேட்பாளர்களை விலகுமாறு பாஜக மிரட்டல் மற்றும் அழுத்தம் கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேட்பாளர்கள் விலக காரணம், மத்திய அமைச்சர்கள் சிலரே நேரடியாக தலையிட்டு, தனது வேட்பாளர்கள் மீது அழுத்தம் கொடுத்து அவர்களை தேர்தல் களத்தில் இருந்து விலக செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி, "நான் வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக, அவருக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளது. கள நிலவரத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவரே தேர்தலில் போட்டியிட்டு பார்க்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

தேர்தல்களை எதிர்கொள்வதில் உள்ள சவால்களை நேரடியாக கண்டறிய, பிரசாந்த் கிஷோர் ஒரு வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்பதே பாஜகவின் சவாலின் சாரம்சமாகும்.

இருப்பினும் பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டுகள் பீகார் அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.