கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில், நாயக்கனஹட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ குரு திப்பேஸ்வரசுவாமி கோயிலின் குடியிருப்பு வேதப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றும் வீரேஷ் ஹிரேமட் என்றவர், 9 வயது மாணவர் தருணை மிகவும் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வெளியான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி, பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர் தனது பாட்டியுடன் தொலைபேசியில் பேச முயன்றதற்காக, ஆசிரியர் முதலில் அவனுடன் சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார்.
பின்னர், மாணவரை இழுத்துக் கீழே தள்ளி தரையில் விழ வைத்து, காலால் கடுமையாகக் உதைத்து கைகளால் அடித்து , மிகவும் காயமடையும்படி தாக்கினார். மாணவரின் கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டும், ஆசிரியர் அடிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தார். இதனால் மாணவர் பயத்துடன் கதறி அழுது, “குருஜி” என்று கூச்சலிட்டு மன்னிப்பு கோரினார். இந்த வீடியோவைப் பார்த்து, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவிட்டு, குற்றவாளி ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்த கோயிலின் நிர்வாக அதிகாரியான கங்காதரப்பா, உடனடியாக நாயக்கனஹட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், வழக்கு பதிவான சில மணி நேரங்களில் குற்றவாளி ஆசிரியர் வீரேஷ் ஹிரேமட் தலைமறைவாகிவிட்டார். இதனால், போலீசார் கல்புர்கி பகுதியில் தீவிரமான தேடுதல் நடவடிக்கையை நடத்தி, இன்று அவரை வெற்றிகரமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
சம்பவத்தைக் கேட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், ஆசிரியருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கோரி, பள்ளி வெளியே போராட்டம் நடத்தினர். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உடனடியாகப் பதிலளித்து, “இந்த மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவத்தை நான் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பேன். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வேன்” என்று அறிவித்துள்ளார். மேலும், தனது துறை அதிகாரிகளுக்கு விரைவாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதோடு, சமஸ்கிருத வேதப் பள்ளி நிர்வாகத்திடமிருந்தும் சம்பவத்தை மறைத்ததற்காக விளக்கம் கோரியுள்ளனர்.