திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
Vikatan October 24, 2025 11:48 PM

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். செல்வ சேகரன் 2015 முதல் 2022 கால கட்டங்களில், திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கதுறையில் பணியாற்றியிருக்கிறார். விருதுநகரில் பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக செல்வ சேகர் மீது விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு பதிவு செய்திருந்தது.

சோதனை நடைபெற்ற திண்டுக்கல் வீடு

இந்த வழக்கு தொடர்பாகவே திண்டுக்கல்லில் இவர் வசிக்கும் வீடு மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை 9.30 மணிக்கு நிறைவடைந்தது. மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சோதனை நிறைவடைந்து புறப்படும் அதிகாரிகள்

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைகள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.