BB Tamil 9 Day 19: நாமினேஷன் பாஸ் கிடைக்காத ஆத்திரம்; worst performers யார் யார்?
Vikatan October 25, 2025 08:48 PM

‘அண்ணன் தம்பி ரெண்டு பேரு. ஒருத்தன் முரட்டுப் பீஸூ. இன்னொருத்தன் முட்டாப் பீஸூ’ என்பார் விவேக், ஒரு காமெடி காட்சியில். பாரு - கம்ருதீன் கூட்டணியைப் பார்க்கும் போது இதுதான் நினைவிற்கு வருகிறது. 

ஆதிரை குறிப்பிட்டதைப்போல பாருவின் நிழலில் இருந்து விலகி தனியாக ஆடினால் திவாகருக்கு ஆதரவு கூடலாம். 

BB TAMIL 9: DAY 19 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 19

சுபிக்ஷா வென்றது பாருவை வயிறு எரிய வைத்திருக்கிறது. “சுபிக்ஷாவை ஏதாவது செஞ்சே ஆகணும். நம்ம டீல் பேசிட்டு நம்மளையே டீல்ல விட்டுட்டா.. நாமினேஷன் பாஸ் எனக்கு கிடைக்கலைன்னா அவ்வளவுதான்” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிய பாரு, சில நிமிடங்களுக்குப் பிறகு அழுகையுடன் “அந்த பிச்சை நாமினேஷன் பாஸ்.. யாருக்கு வேணும்?” என்று தலைகீழாகப் புலம்பிக் கொண்டிருந்தார். 

நாமினேஷன் பாஸ் கிடைக்காத கோபத்தில் பாரு புலம்பும்போது ஓர் உண்மையையும் வாய் தவறி சொல்லிவிட்டார். “இவளுக்காக உடைஞ்ச பாட்டில்களை கூட அப்ரூவ் பண்ணேன்”... நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.. தரக்கட்டுப்பாட்டு அதிகாரியே இப்படி தரமில்லாமல் நடந்து கொண்டால் உற்பத்தி எந்த லட்சணத்தில் இருக்கும்?!

நாமினேஷன் பாஸ் கிடைக்காத ஆத்திரத்தில் புலம்பிய பாரு


பாருவிற்கு சுபிக்ஷா மீதிருந்த கோபம் திவாகரிடமும் பாய்ந்தது. “என்னைப் பத்தி யோசிச்சியா.. நீயி.. எனக்காக என்ன செஞ்ச.. எல்லோரும் என்னை முதுகில குத்தறாங்க.. நீயும் ஈ…ன்னு இளிச்சிக்கிட்டே குத்திட்டே.” என்று பொருட்களை தூக்கியடித்து புலம்ப ஆரம்பிக்க “ஆங்.. அப்படித்தான்.. அப்படியே லெஃப்ட்ல போடு.. மாதுளம்பழம், தர்பீஸூ.. முட்டை தொக்குன்னு பொண்ணுங்க கையால வெளுத்துக் கட்டினாம்மா” என்று ஏற்றிக்கொடுத்தார். 

வினோத்துடன் கம்ருதீனும் வந்து ‘நீயெல்லாம் ஒரு ஆளாய்யா. காமெடி பீஸூ..’ என்று கிண்டலடிக்க திவாருக்கு கோபம் வந்துவிட்டது. ‘மரத்துக்கு சேலை கட்டினா கூட அதுக்கு ஆதரவா மாறிடுவான்’ என்பதுபோல் வினோத் அடித்த கமெண்ட் வில்லங்கமாக ஆகிவிட்டது. அதை டிவிஸ்ட் செய்து சுபிக்ஷாவுடன் கனெக்ட் செய்து “இதெல்லாம் ரொம்ப தப்பு.. பொண்ணுங்களைப் பத்தி தப்பா பேசக்கூடாது” என்று திவாகர் ஊரைக்கூட்ட கனி தலைமையில் ஒரு மினி பஞ்சாயத்து ஓடியது. 

“நான் படிச்ச படிப்பு என்னைத் தடுக்குது.. இல்லைன்னா..’ என்று திவாகர் சவுண்டு விட “இல்லைன்னா.. என்ன பண்ணுவே.. என்னைப் பத்தி தப்புத் தப்பா நீ பேசலையா.. அவ்வளவுதான் உன்னை” என்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தார் கம்ருதீன். 

BB TAMIL 9: DAY 19 பாரு - கம்ருதீன் worst performers - சரியான தேர்வு

நாள் 19. நள்ளிரவில் என்ன சண்டை போட்டாலும் காலையில் குத்து நடனத்தை கோரஸாக ஆடுகிறார்கள். அதற்கேற்ப ‘அமுக்கு டுமுக்கு டமால் டூமீல்’ என்று ரகளையான பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். விக்ரம் பெல்லி டான்ஸ் எல்லாம் ஆடி அசத்தினார். 

கத்தியை ஸ்டைலாக தூக்கிப்போட முயற்சித்த பாரு, அது திரும்பி வந்து கையில் குத்த ‘அய்யோ’என்று அலறினார். (தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கான குறியீடு!). அதிகாலையில் தினமும் ஒலிக்கும் சுப்ரபாதம்போல, பிக் பாஸ் வீட்டு வழக்கப்படி காலையிலேயே எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஒருவரை தன் உடல்மொழியால் வெறுப்பேற்றும் கலையில் பாரு சிறந்து விளங்குகிறார். 

‘Worst Performer’-ஐ தேர்ந்தெடுக்கும் நேரம். போட்டியாளர்கள்  கனகச்சிதமாக இருவரைத் தேர்ந்தெடுத்தார். மிக நியாயமான தேர்வு அது. பாரு மற்றும் கம்ருதீன். மோசமான போட்டியாளராக கனியைத் தேர்ந்தெடுத்து பழிவாங்கிய பாரு, அதற்கான காரணங்களை நீட்டி முழக்க, அதுவரை ஜாலியாக வேடிக்கைப் பார்த்த பிக் பாஸ் “பாரு.. கனி.. அடுத்த வார தலைவர் போட்டில இருக்காங்க. அவங்களை தேர்ந்தெடுக்க முடியாது” என்று சொல்லி பாருவிற்கு சிறப்பான நோஸ் கட் கொடுத்தார். 

துஷார் குறித்து கம்ருதீன் சொன்ன காரணங்கள் வில்லங்கமாக இருந்தன. “பாத்ரூம் போனாகூட பின்னால வருவேன்னு சொல்றான். ஸ்கூல் பையன் மாதிரி நடந்துக்கறான்..என்ன மாதிரியான வளர்ப்பு..” என்று மோசமான காரணங்களைச் சொல்ல திவாகர் அதை ஆட்சேபித்தார். “ஆமாம்.. எனக்கு கோபம் வரும். மக்கள் என்னை வெளியே அனுப்பிச்சாலும் கவலையில்லை” என்கிறார் கம்ருதீன். இவர்கள் எல்லாம் பிக் பாஸிற்கு ஏன் வருகிறார்கள் என்று தெரியவில்லை. பிக் பாஸ் டீமும் இவர்களைப் போன்ற ஆட்களைத்தான் வருடா வருடம் செலக்ட் செய்து அனுப்புகிறது. (கடந்த சீசனில் அர்னவ்). 

BB Tamil 9 Day 19 ‘எதிரிக்குக் கூட மதிப்புண்டு. துரோகிக்கு இல்லை’ - கம்ருதீன் பன்ச் டயலாக்

‘கம்ருதீன் பாருக்காக ஆடறாரு” என்றார் சுபிக்ஷா. ‘பாரு கிட்ட நெகட்டிவிட்டி மட்டும்தான். கிரியேட்டிவிட்டி இல்ல’ என்று விக்ரம் சொன்னது திருவாசகம். இந்த டாஸ்க் முடிந்த போது “நான் கலை பேரைச் சொல்லியிருக்கணும். எஃப்ஜேவாவது நேருக்கு நேரா சண்டை போடுவான்” என்று புலம்பினார் பாரு. ஏனெனில் கலை அவரது பெயரைச் சொல்லி விட்டாராம். 

இறுதியில் பாருவும் கம்ருதீனும் worst performer-களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறை சென்றார்கள். இருவரின் மீது பிக் பாஸூம் எரிச்சலில் இருந்தார்போல. “இப்பவே ஜெயிலுக்குப் போகணும்” என்று உத்தரவிட ‘ஹய்யோ.. பிக் பாஸ்..’ என்று சிணுங்கினார் பாரு. ஜாடிக்கேத்த மூடி போல சிறைக்குள் சென்ற பாருவும் கம்ருதீனும் உற்சாகமாகப் புறணி பேசினார்கள். “நல்ல வேளை.. உன்னை என் கூட போட்டாங்க. கலையைப் போட்டிருந்தா அவனை கடிச்சுப் போட்டிருப்பேன்” என்று ஆத்திரப்பட்டார் பாரு. “எதிரிக்குக்கூட மதிப்புண்டு. துரோகிக்கு மதிப்பில்லை” என்று பன்ச் வசனம் பேசினார் கம்ருதீன். 

எஃஜேவிற்கும் ஆதிரைக்கும் மீண்டும் ரொமான்ஸ் மோதல் வந்தது. (அடப் போங்கப்பா.. வேற வேலையில்ல!) இதற்கு சபரி பஞ்சாயத்து நடுவராக வேறு இருந்தார். வீடு மூன்று அணிகளாகப் பிரிந்து ரேம்ப் வாக் ஷோ நடத்தியது. 

கனி டாப் போட்டியாளர்களாக முன்னேறும் விக்ரம், பிரவீன்ராஜ், கெமி

அடுத்ததாக 'best performer' தேர்வு. வழக்கமாக வீட்டுக்குள் நடக்கும் இந்த டாஸ்க்கை கார்டன் ஏரியாவில் நடத்தி பாரு -கம்ருதீன் ஜோடியை எரிச்சல்பட வைத்தார் பிக் பாஸ். இதில் பெரும்பான்மையோர் பிரவீன் மற்றும் விக்ரம் பெயர்களைச் சொன்னார். “எனக்கு ரொம்ப காண்டாகுது.. இவங்களைப் பார்த்தாலே எரிச்சலாகுது..” என்று புதுப்பேட்டை தனுஷ் மாதிரி ஜெயிலுக்குள் இருந்து கத்திக் கொண்டிருந்தார் பாரு. திவாகரின் இடத்தை ரீப்ளேஸ் செய்வது போல் பாருவின் கால் விரலுக்கு சொடக்கு எடுத்துக் கொண்டிருந்தார் கம்ருதீன். (வௌங்கிடும்!) 

சிறைக்குள் சென்றாலும் திவாகரை பாருவால் மறக்க முடியவில்லை போல. “வீட்டுக்குள்ள என்ன பண்றான்?” என்று விசாரிக்க “யாருமே அவனை கண்டுக்கலை. தனியா உக்காந்திட்டிருக்கான்” என்று வினோத் உற்சாகமாகச் சொல்ல “அவஸ்தைப்படட்டும். முதல் வாரம் ஃபுல்லா நான்தான் அவரைக் காப்பாத்தினேன். இனிமே கிட்டயே போக மாட்டேன். சாவட்டும்’ என்கிற மாதிரி சாபம் விட்டார் பாரு. இவர்களுக்குள் சுபிக்ஷா பற்றிய பேச்சு வந்தபோது ‘த்தூ..’ என்று கம்ருதீன் துப்பியதெல்லாம் அநியாயம். 

BB Tamil 9 Day 19

“பாருவை ஏமாத்தணும்ன்றது என் நோக்கமில்லை. ஆனா எனக்காக தொழிலாளர்கள் நிறைய பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்தாங்க.. வியன்னா அல்லது விக்ரமிற்குத்தான் நாமினேஷன் பாஸ் கொடுக்கணும்” என்று சுபிக்ஷா சொல்லிக் கொண்டிருந்தார். எனவே பாருவிற்கு பட்டை நாமம்தான் போல. 


இந்த வார எவிக்ஷனில் ஆதிரை வெளியேற்றப்பட்டார் என்கிற மாதிரி தகவல் வந்திருக்கிறது. இப்படியாக எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள் கழற்றப்பட்டு சுவாரசியமான வைல்ட் கார்ட் என்ட்ரிகள் பொருத்தப்பட்டால்தான் இந்த சீசன் வண்டி கொஞ்சமாவது ஓடும். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.