மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், காதல் தகராறு காரணமாக இளம்பெண்ணை குத்திக் கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் வசித்து வந்த சோனு பராய் (24) என்ற இளைஞர், மனிஷா யாதவ் என்ற இளம்பெண்ணுடன் காதலித்து வந்தார்.

சில மாதங்களாக மனிஷா வேறு ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளாரோ என சோனுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், எட்டு நாட்களுக்கு முன்பு மனிஷா உறவை முறித்து “இனி நாம இருவரும் பிரிந்து விடலாம்” என தெரிவித்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான சோனு, மனிஷாவை மீண்டும் சந்தித்து பேச வேண்டும் என தீர்மானித்தார். நேற்று காலை வீட்டிலிருந்து “வெளியே போயிட்டு வரேன்” என கூறி, சமையலறையில் இருந்த கத்தியை மறைத்து பையில் வைத்துக்கொண்டு சென்றார்.பின்னர், மனிஷாவை தொடர்பு கொண்டு “ஒருமுறை கடைசியாக பேசணும்” என்று சொல்லி, நகரின் ஒரு முதியோர் இல்லம் அருகே அழைத்துச் சென்றார்.
அங்கு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தின் உச்சியில் சோனு, கத்தியை எடுத்து மனிஷாவை பல இடங்களில் குத்தி கொலை செய்தார்.அதைத்தொடர்ந்து, குற்ற உணர்ச்சியில் தானும் தப்பிக்க முடியாது என உணர்ந்த சோனு, அதே கத்தியைப் பயன்படுத்தி தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்தார்.
இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த துயரச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.