'ஆப்பரேஷன் ஷட்டர் டவுன்' என்ற பெயரில் மத்திய - மாநில அரசுகள் பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்ட உதவித் தொகைகளை திருடி மோசடியில் ஈடுபட்ட, 30 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, பயனாளர்களுக்கு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. இதற்கான தொகை, பயனாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு வழங்கப்படும் தொகையை குறிவைத்து, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் மோசடி கும்பல் ஒன்று செயல்பட்டு வந்தமை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த நபர்களுக்கு மத்திய அரசின், பிரதம மந்திரி கிசான் விகாஸ் திட்டம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், மாநில அரசின் பேரிடர் மேலாண்மை தகவல் மையத் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களில், பயனாளர்கள் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு பின்னால் மோசடி கும்பல் ஒன்று செயல்படுவதாகவும் ராஜஸ்தானின் ஜலாவார் போலீசாருக்கு சில மாதங்களுக்கு முன் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, 'ஆப்பரேஷன் ஷட்டர் டவுன்' மூலம் அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடுத்தாத 'சைபர் கிரைம்' வாயிலாக பணமோசடி குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த கும்பலின் தலைவர் ராமவதார் சைனி, ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், மோசடியில் தொடர்புடைய மேலும், 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து, 52 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார்கள், 35 கணினிகள், 'பயோ - மெட்ரிக்' சாதனங்கள், நுாற்றுக்கணக்கான சிம் கார்டுகள், 11,000க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் போது 03 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் கைப்பற்றதாக கூறப்படுகிறது.
அரசின் நலத்திட்ட நிதியை இந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதாகவும், ஜலாவார் பகுதியில் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, ஜோத்பூர், கோட்டா, பூந்தி மற்றும் தவுசா ஆகிய இடங்களில் போலி அடையாளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., அமித்குமார் புடானியா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையில், பல வங்கிக் கணக்குகள் ஒரே ஒரு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதும், அவற்றில் அரசுப் பணப் பரிவர்த்தனைகள் நடந்து, உடனடியாக ரொக்கமாக எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததாகவும் அமித்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ராமவதார் சைனி, அரசின் நலத்திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், 75 சதவீத கமிஷன் பல்வேறு கிராம மக்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு அரசுப் பலன்கள் பெற்று தருவதாக உறுதியளித்து,தகுதியற்ற நபர்களை, தகுதியான பயனாளிகளாக ஆவணங்கள் வாயிலாக மாற்றி மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால், அரசு பணம் தகுதியற்ற நபர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாகவும், இதற்காக, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, 50 முதல் 75 சதவீதம் வரை ராமவதார் சைனி கமிஷன் பெற்றுள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி., அமித்குமார் புடானியா தெரிவித்துள்ளார்.