யாரும் பயப்பட வேண்டாம்... செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்..!
Top Tamil News October 26, 2025 01:48 AM

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடையார் பெசன்ட் நகர் கடற்கரை முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அவருடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அசன் மவுலானா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர். ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாவட்ட அளவிலான மாநில அளவிலான அலுவலர்கள் என்று ஆயிரம் பேர் அளவிற்கு கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் தந்து அதற்கான குறிப்புகள் எல்லாம் அவர்கள் இடத்தில் தந்து அனுப்பப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கடந்த 4½ ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற மழைநீர் வடிகால்வாய்கள் குறிப்பாக நீர்வள ஆதாரத்துறை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என்று அனைத்து துறைகளின் சார்பிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

அரசு பொறுப்பேற்ற பிறகு பெரிய அளவிலான பாதிப்புகளில் இருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வருகிறது. 

5300 கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. அடையாறு பொருத்தவரை 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கரையோரம் உள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். தற்போது 40,000 கன அடி தண்ணீர் வந்தால் கூட குடியிருப்பு பகுதிகளை பாதிக்காது. இந்த முகத்துவாரத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் கொண்டு வர முடியும். வடகிழக்கு பருவமழை முடியும் வரை மூன்று பொக்லைன் எந்திரங்கள் இங்கு அகலப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும். 

சென்னையில் கடந்த 5 நாட்களில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரு இடத்திலும் கூட மழை நீர் சூழ்ந்து மக்களை பாதிக்கவில்லை. முகத்துவாரத்தை சீர்படுத்தும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் கனஅடி மணல் எடுக்கப்பட்டதன் மூலம் சீனிவாசபுரம் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் வெள்ளநீர் வெகு வேகமாக கடலில் கலப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.